அருந்ததி சமூக பெண் ஊராட்சி தலைவர் விரட்டியடிப்பு

 நீங்க உத்தரவு போடக் கூடாது… அருந்ததி சமூக பெண் ஊராட்சி தலைவர் விரட்டியடிப்பு!

             திருவண்ணாமலையில் கொடுமை  

        



 திருவண்ணாமலை: ஆரணி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தன்னை பேச விடாமல் விரட்டியடித்ததாக அருந்ததி சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.  இந்தச் சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

         திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிரமத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அருந்ததி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் இவரைச் சிலர் பேச விடாமல் அடிக்கடி தடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

         இவ்வாறு இருக்கையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இவர் பேசத் தொடங்கியபோது சிலர் குறுக்கீடு செய்துள்ளனர். இதைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பேசி வந்த நிலையில், குடிபோதையில் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். தலைவர் எத்தனை முறை எச்சரித்தாலும் அவர்கள் தங்கள் ரகளைகளை நிறுத்தவேயில்லை. தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் தலைவர் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனக் குடிபோதையில் இருந்தவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து தலைவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

 பணி செய்யவிடாமல் சதி 

           



 தங்கள் ஊரில் இருக்கும் பிரச்னைகள்குறித்து பேசித் தீர்வு காண முடியும் என நம்பிக்கையுடன் வந்த ஊர் மக்களுக்கு இந்த வாக்குவாதம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இனி வரும் கூட்டங்களிலாவது மக்கள் பிரச்னைகளைப் பேசித் தீர்வு காண வேண்டும் என்றும், இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தன்னை செயல்பட விடாமல் தொடர்ந்து இடையூறு செய்வதாகத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். 

         இந்தச் சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் ஊராட்சிமன்ற தலைவர்களாகப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது அவர்களின் கணவர்கள்தான் தலைவர்போலச் செயல்படுவார்கள். விதிவிலக்காகத்தான் பெண்கள் தலைவராகப் பணியாற்றுவார்கள். இவ்வாறு இருக்கையில் சுயமாகப் பணியாற்ற முன்வந்த பெண் தலைவரைப் பணி செய்யவிடாமல் தடுப்பது என்பது சரியானது அல்ல எனச் சமூக ஆர்வலர்களும் இந்தச் சம்பவம்குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 



Post a Comment

Previous Post Next Post