அடேங்கப்பா ! எவ்வளவு உயரமான மரம் !

 மிக உயரமான மரம் 

 பிரேசில் : மிக உயரமான மரம் அமேசான் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 25 மாடி கட்டிட உயரத்தில் வானளவில் உயர்ந்து நிற்கும் இந்த மரத்தைப் பல கட்ட போராட்டத்துக்குப் பின்னர் ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.



பிரேசிலில் இருக்கும் அமேசான் காடு உலகிலேயே மிகப்பெரிய மற்றும் மிக நீண்ட காடு ஆகும். மனிதர்களுக்குத் தெரியாத பல ஆயிரம் விலங்குகள், பறவைகள் இந்தக் காட்டுக்குள் இருக்கின்றன 

 உலகத்தின் நுரையீரல் 

  உலகில் வேறு எங்கும் இல்லாத நூற்றுக்கணக்கான மரங்களின் வகைகளும் இங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த அமேசான் காட்டின் பரப்பளவு 7 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் வெறும் வனப்பகுதி மட்டும் 5.5 மில்லியன் சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளன. பிரேசிலில் தொடங்கி 9 நாடுகளில் இந்தக் காடுகள் பரவியுள்ளது. உலகத்தின் நுரையீரல் என்றும் இந்தக் காடுகள் அழைக்கப்படுகின்றன.

 

 மிக உயரமான மரம் 



இந்த நிலையில், அமேசான் காடுகளில் இருந்த மிக உயரமான மரத்தை ஆய்வாளர்கள் குழு கண்டறிந்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு 3 டி வரைபட திட்டத்திற்காகச் செயற்கைக்கோள் மூலமாக அமேசான் காடுகள் படம் பிடிக்கப்பட்டது. இதில் மிக உயரமான மரம் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. அதன் உயரத்தை பார்த்துப் பிரம்மித்து போன ஆய்வாளர்கள் அமேசான் வனப்பகுதியில் இந்த மரம் இருக்கும் இடத்தை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என முடிவு செய்தனர். 

 மரம் கண்டுபிடிப்பு 



இதற்காக மூன்று ஆண்டுகள் திட்டம் வகுத்துப் பல்வேறு சவால்களைக் கடந்து ஆய்வுக்குழு அமேசான் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இந்த ஆய்வுக்குழுவின் முதல் பயண முயற்சி தோல்வியில் முடிந்தது. 10 பேர் கொண்ட குழு டிரெக்கிங் சென்றபோது அதீத களைப்பு மற்றும் குழு உறுப்பினர் உடல் நல பாதிப்பு அடைந்ததால் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து மீண்டும் விரிவான திட்டத்துடன் கடந்த மாதம் 250 கி.மீட்டர் தொலைவைப் படகு மூலமாகவும் 20 கி.மீட்டர் நடைபயணமாகவும் சென்று மரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 

290 அடி உயரம் 

19 பேர் கொண்ட இந்த ஆய்வுக்குழுவினர் மரத்தைப் பார்த்ததும் வியந்து போகினர். ஏனென்றால் இதன் உயரம் 88.5 மீட்டர் (290 அடி) ஆக இருந்தது. அதாவது 25 மாடி கட்டிடத்தின் உயரத்தின் அளவுக்கு வானளவுக்கு நிமிர்ந்து இந்த மரம் நின்றது. அமேசான் வனப்பகுதியில் இருக்கும் மரங்களிலே மிக உயரமான மரம் இதுவேயாகும். 

600 ஆண்டுகள் பழமையான மரம் 



இந்த மரத்தின் பெயர் ஏஞ்சலிம் வெர்மெலோ (Angelim Vermelho) ஆகும். இதன் அறிவியல் பெயர் Dinizia excelsa- ஆகும். மரத்தின் இலைகள் மற்றும் அங்குள்ள மணல் உள்பட பிற மாதிரிகளை ஆய்வுக்காக இந்தக்குழுவினர் எடுத்து வந்துள்ளனர். எப்படியும் இந்த மரம் 400 முதல் 600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 


Post a Comment

Previous Post Next Post